Monday, July 6

என்ன இது...

மிக உன்னதமான, மகத்தானது தான்

உயிர் தரும் கடமையாயிற்றே….

மண்ணில் ஒரு விதை முளையெடுக்க

எத்தனை எத்தனை காவல்கள்

இது உள்ளுக்குள் விதைந்து வளரும் புது ஜீவன்

உணர்ச்சி பல யூகிக்கும் பிண்டம்…

தந்தை உயிர் தர, தாய் தன்னில் மீதியைத் தந்தாள்…

தேகம் ஒன்றில்… ஜீவன் ரெண்டு… மூச்சு ஒன்று…

 

பிரபஞ்சத்தை கிழித்தெரிக்கும் 

கட்டுக்கடங்கா உணர்ச்சிகளின் இணைப்பு,

பாரில் விழித்தெழும் புது இணைப்பு,

இறைவன் பெண்மைக்கு மட்டுமே

அளித்த தித்திக்கும் பிரசாதம்…

தாய்மை சுகமான சுமை

தாய்மனதை அந்த பிஞ்சும் உணர்கிறது…

செல்வம் கோடி சேர்த்திருப்பினும்

இந்த பந்தத்திற்கு – தாய்மைக்கு – ஈடேது?!

 

பத்து திங்களும் புத்தம் புது ஜென்மம்

புது பிறவி எடுக்கிறாள்…

மசக்கையுற்ற மேனிதனை

காத்து சேவகம் செய்து

பட்டும் படாமல் உண்டுறங்கி

கால்களின் விரல்களைக் கூட மறக்கிறாள்

தாய்மை திரையிட்டு இருப்பதால்…

சின்ன சின்னதாய்

உயிர் கசியும் வலிகள்

நொடிக்கொரு முறை

செல்ல உதைகள்

ஒரு சுவாசம் போதாமல்

நொடிக்கு இரண்டானது

விரல்களின் செல்ல வருடலில்

சின்னவனின் குட்டி உறக்கம்…

இவள் இதய வானில் நொடிப்பொழுதில்

கோடி வர்ணங்களில் அழகிய ஜாலங்கள்!

விழி நுனியிலும் நெஞ்சுக்கூண்டிலும்

இன்னும் ஈரமாயிருக்கும் மோகன தருணங்கள்!

சிங்கார கண்ணனவன் சீதனமாய் தந்த

அன்பு மிளிரும் உறவிது,

தாய்மையின் மேன்மைதனை

மின்னச் செய்யும் ஆழமான உணர்விது!

 

பாவையவள் மென்மையானவள்,

பூப்பெய்யும் போது

பெண்மையின் இரகசியத்தை அறிகிறாள்!

ஆண்மை ஆட்கொள்ளும் போது

பெண்மையின் குணங்களை உணர்கிறாள்!

தாய்மையைச் சுவாசிக்கும் போது

மங்கையர் பிறப்பின் மகத்துவத்தையும்

வாழ்வின் முழு அர்த்தத்தையும் நுகர்கிறாள்!

 

தாய்மை,

பலருக்கு வாய்ப்பதில்லை,

சிலருக்கு நிலைப்பதில்லை,

பெற்றவர்கள் பாக்கியவதிகள்,

உணர்கின்றவர்கள் உன்னதமானவர்கள்,

பெற்றுணர்ந்து மெய் சிலிர்க்க காத்திருப்போர்

தாய்மையின் சின்னங்கள்!

 

ஆண்களே,

உங்களிடத்திலும் தாய்மையுண்டு,

பெண்ணை நேசித்து மனதில் சுமக்கிறீர்,

காதலை சுவாசிக்கிறீர்,

திருமணம் உங்களுக்குப் பிரசவம் தினம்!

காதல் குழந்தையுடன் இனிதே வாழுங்கள்_







_ மலர்விழி J



2 comments:

  1. நல்ல பதிவுகள், இனிதே தொடருங்கள், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி :)

    ReplyDelete