Thursday, October 29

என்னென்னவோ என் ஆசைகள்...

பலர் மனதை வருடி,

இன்றும் இனிமையாய் வாழும்

அழகான வரிகள், தித்திக்கும் இசை,

உயிரை உறைய செய்யும் குரல் கொண்ட

சூப்பர் பாட்டு...என்னை தாலாட்டும் கீதம்...


(திரை - திருக்கல்யாணம்

பாடியவர்கள் - ஜெயசந்திரன், s. ஜானகி)

*******************************************************************

அலையே கடல் அலையே

ஏன் ஆடுகிறாய், என்ன தேடுகிறாய்

இன்ப நினைவினில் பாடுகிறாய்

என்னென்னவோ உன் ஆசைகள்


பொன்மணல் மேடை மீதினிலே

வெண்பனி வாடை காற்றினிலே

மயக்கும் மாலை பொழுதினிலே

காதலிஇந்த நாயகன்

பல நாள் வரை காத்திருக்க

என்னென்னவோ உன் ஆசைகள்


அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ உன் ஆசைகள்


வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே

வாடையில் வாடும் பனி மலரே

நெஞ்சினில் என்றும் உன் நினைவே

கண்மணி உயிர் காதலி

என் கைகளில் தவழ்ந்திருக்க

என்னென்னவோ என் ஆசைகள்


கோவிலைத் தேடி தவமிருக்க

தேவியின் நாயகன் துணையிருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

தெய்வமே இளம் தென்றலே

எங்கள் காதலை வாழ வைப்பாய்

என்னென்னவோ நம் ஆசைகள்


அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ நம் ஆசைகள்

என்னென்னவோ நம் ஆசைகள்

*******************************************************************


உணர்ந்து கேட்பவர்களுக்கு,

_மனசு லேசாகும், தலை சாய்க்க தோள் தேட தோன்றும்,

ஏனோ, ஏதோ ஒன்னு வருடும், யாருடைய ஞாபகமாவது வரும் சின்ன புன்னகையுடன் :)

Tuesday, August 11

காத்திருப்பேன்...சத்தமின்றி மெல்ல மிருதுவாய்

என் வாழ்வில் நுழைந்தாய்

எப்படி பறிகொடுத்தேன் என்னை? – உன்னை

துளி கூட அறியாது!

மன தவிப்பு தாளாமல் உன் வசம் ஆனேனா?

அல்ல ஆழமாய் உன் மேது ஓர் ஈர்ப்பு கொண்டேனா?

என் கனவின் நீ நுழைவாய் என்று அறியாது

உறக்கத்தில் மென்மையாய் மிதந்தேன்

பல காலம் காத்திருந்தேன்

உன் போன்ற ஒருவனை சந்திக்க

இப்போது நீ என்னோடு; என் அருகில்

இனிமையாய் தான் இருக்கும் இவை நினைவானால்…


இப்போது உன் முன் நிற்கிறேன்

திறந்த மனதோடு, உன்னை மட்டும் சுமந்து - நீயும்

உன் மனக்கதவை திறந்துவிடுவாய்

என்னோடு வாழ்வை பகிர்வாய் என்று

உன்னோடு நான் நெருங்க

உன் அணைப்பில் நான் கரைந்து

உன்னோடு கலந்துவிட வேண்டும்!

உன் குறும்பு பார்வையால் நான்

கூனி குறுகி புன்னகைக்க வேண்டும்!

உன்னில் உறைந்து என் உயிர் சிரிக்க வேண்டும்!

உன் மார்பில் முகம் புதைத்து நான் வாழ வேண்டும்!

மரணத்தைக்கூட நான் உன் மடியில் தழுவ வேண்டும்!

யாரடா நீ? புதுமையாய் ஏதோவொன்று உள்ளே நிகழ்கிறது!?

என்ன இது??? எப்படி என்னுள்???


உன்னால் முடிந்தால்

என் மனதை ஆழமாய் உற்று பார்

உன் மனதை என்னிடம் கொடு

சத்தியமாய் துன்புறுத்தவோ

வதைக்கவோ, சிதைக்கவோ மாட்டேன்…

அத்துணை கொடியவளல்ல… உன்னை

மனதில் சுமக்கும் உன் இரண்டாம் தாயடா நான்!


என் தவிப்புகளைப் புரிந்துக் கொள்ள

கஷ்டமாய், ஏளனமாய், புதிராய், கேளியாய் இருப்பினும்…

என் காதல் முழுமையையும்

தந்துவிட்டேன் – உன்னிடம்…..

சீக்கிரம் வந்து என் கைகளைப் பற்றிக்கொள்…

என் காதல் உன்னையும் உறைய வைக்கும்…

அந்த திருநாள் தூரமில்லை – என் உண்மை

காதல் என் பக்கமிருப்பதால்!

காலமெல்லாம் உனக்காகவே காத்திருப்பேன்...


என்றென்றும் மனதார உன்னோடு வாழும்,

உன்னவள் :)

Tuesday, August 4

உண்மை அன்பு எங்கே...

ஞானி ஒருவர் கூறுகிறார், “வானத்தைப் பிழிந்து மழையாக்குவதும், மழையை வானமாக்குவதும் எனக்குச் சுலபம். ஆனால், என் சக்தியை நிரூபிக்க அது மட்டும் போதாது…உண்மையான, மகத்தான சக்தி ஒன்று உள்ளது...அது அன்பு”.

அன்பினால் மட்டுமே ஒருவர் மனதைத் தொடவும் மனதின் தன்மையை மாற்றவும் முடியும்! “அன்பே சிவம்”, “சிவமே அன்பு” கடவுளை நம்புகின்றவருக்குக் கடவுளே அன்பு. நாத்திகருக்கு அன்பே கடவுள். இதிலிருந்து மீள்பவர் எவருமிலர். திருமந்திரத்தில் திருமூலர் இதையே அழகாய் பாடியும் உள்ளார்,

“ அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”

இறைவனது தோற்றம் மங்களகரமானது. இருப்பிடமும் மங்களகரம்.அன்பை நுகருபவர் இறைவனையடையும் வழியை எளிதில் பெறுவர்.

கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு; பெறுவதும் மறப்பதும் வாழ்க்கை.

Love lives by giving and forgiving; self lives by getting and forgetting.

நல்லவராய் இருப்போம்; நல்லதே செய்வோம் (be good, do good)
நமக்கும் நல்லதே நடக்கும்!

உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம் முதலில் உள்ளூர உணர வேண்டும். இறைவனை தேடி அலையாதீர். அவன் உங்களிடமுள்ள அன்பில் ஜோதியாய் இருக்கிறான். அன்பை அனைவரிடத்திலும் செலுத்துங்கள், இறைவன் உங்களை அவன் அருளால் அணைப்பான், அரவணைப்பான்.

உங்களை வெறுப்பவர்களை நீங்கள் விரும்புங்கள், உங்களை விரும்புகிறவர்களை ஒரு போதும் வெறுக்காதீர்! இப்பக்குவமானது ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுமேயானால் நாம் இறைவனை நெருங்கும் தருணம் மிக நீளமில்லை. அனைவரின் பெயரிலும் உருவத்திலும் இறையைக் காண்போம்!

இதோ பாருங்கள்...கள்ளங்கபடமற்ற அன்பைப் பொழியும் இந்த மழலைகளிடத்திலும் அவன் இருக்கிறான்…

அவன் அன்பின்றி இவ்வுலகமில்லை,
அவனின்றி நாமுமில்லை,
அவனின்றி எதுவுமில்லை...நமக்கு எதுவுமில்லை...

நம்முள் வாழும் அவனை அறிவோம்...
ஜோதியை உணர்வோம்...
மெய்பொருளே உமக்கு என்றென்றும் சரணம்...

Monday, August 3

காதலே...காதலே...

ஷாஜஹான் தனது காதல் மனைவிக்கு அன்பின் அடையாளமாக தாஜ்மஹால் எழுப்பியது மாதிரி பெண்களில் கணவனுக்காக பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு.....


பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியான காரியா எனும் நாட்டை, முன்பு (கி.பி 377) ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான்.
அவன் பெயர் மாசோலஸ் (அவர்கள் மொழியில் ஆணழகன்).
அவனை ஆர்ட்டிமிர்ஸியா என்ற பெண் காதலித்தாள்.
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தார்கள்.திருமணம் செய்துகொண்டு அன்பைப் பொழிந்து வாழ்ந்து வந்தனர்... துரதிர்ஷ்டவசமாய் மாஸோலஸ் நோய்வாப்பட்டு,
இளம் வயதிலேயே இறந்து போனான்.
ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு...
ஆனால் அவனது நினைவு அவளை மிகவும் வாட்டியது, வருத்தியது…
மனதிற்குள் அழுதாள், புலம்பினாள், பித்தானாள்...
அந்த நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்.

உலகத்தின் புகழ்ப் பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள்..
36 தூண்கள் அமைக்கப்பட்டன..
விண்முட்டும் அளவில் 24 அடுக்குகள் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது.. நடுவில் கல்லறை..
அதற்குமேல் மாசோலஸ் மன்னருடைய பிரமாண்ட சிலை..
கல்லறைக்குச் செல்ல 200 படிகள்..
கண்ணைக் கவரும் ஓவியங்கள்..
இப்படி எல்லாரையும் கவரும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்து
அதற்கு மாசோலியம் என்று பெயரிட்டாள்.இது உலகின் பழம்பெறும் கலை அதிசயமாக போற்றப்பட்டு வருகிறது.
மேலும் இம்மன்னரின் பெயர் இது போன்ற கட்டிட கலை மற்றும் அமைப்பு கொண்ட அனைத்து கட்டிடங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால்,
மாசோலஸிற்கு காதல் மனைவி கட்டிய உன்னத மாசோலியம்!

உணர்ந்தால்…காதல் உயிரானது!
என்றும் உயர்வானது!
அது யாரையும் விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை...
உலகில் முதலில் தோன்றியது காற்று,
அதில் இதமாய் கலந்து அனைவரையும் ஈர்த்துக்கொண்டு கம்பீரமாய் வலம் வருவது காதல்...

காதலே...காதலே...உனை நுகர்கிறேன், உன்னால் வாழ்கிறேன்!

Friday, July 17

இறைவா...ஒரு விண்ணப்பம்

 (மகனே, என் வாழ்வையும் உணர்வையும் உன்னோடு உனக்காக பகிர்ந்துள்ளேன்)இறைவா ஒரு விண்ணப்பம்,

என்னுள் விளையும் இவன்

வெண்மையான இதயம்,

கருணை விழிகள்,

கொடுக்கும் கரங்கள்,

முட்பாதை மீதும் நடக்கும் துணிவு,

என்றென்றும் தன்னம்பிக்கை,

எந்நாளும் நற்சிந்தை,

சோர்ந்து போகா மனம்,

குன்றாத நேசம்,

குறைவில்லா புன்னகை,

திகட்டாத பண்பு,

தாய்ப்பால் சுவைத்த அவன் நா,

தமிழையும் உயிராய் மதிக்கட்டும்!

இறைவா,

இதில் குறையேதும் விழைத்து விடாதே,

என் தங்கம் பார் வணங்கும் மகானாக வேண்டாம்,

பிறர் போற்றும் அறிஞனாக வேண்டாம்,

நல்லொழுக்கம் கொண்ட தமிழ் மகனாய் தவழட்டும்,

பெண்ணியத்தை மதிக்கும் பெருந்தன்மையை அவனுக்குத் தா!

உன் அருளே அவனுக்கு நான் பெற்றுத்தரும் பெருஞ்செல்வம்!!!

 

   Ø  கொஞ்சம் நப்பாசைக் கொண்ட தாயுள்ளம் J

விட்டுவிடேன்...


எத்துணை ஏக்கம்
என் மீது உனக்கு...
நாள்தோறும் பார்த்தாலும்
இப்படி என்னை அள்ளுகிறாயே!
காற்றுக்குக்கூட இடம் தர மறுத்து என்னை மூச்சடைக்க உராய்ந்து செல்கிறாயே! நீ தொட்டவுடன் சில்லிட்டு போகிறேன்
உன் குறும்பில் என்னையே துறக்கிறேன்..
உன் கொஞ்சல் சுகமானது என்றாலும்
நேரம் தடுக்கிறது...
விட்டு...விடு...நான் போகணும்...
உன்னால் கண்டப்படி முழுதும் நனைந்தேன்
விட்டு விடேன்...ஐயோ பிலீஸ்...
உன்னை விட்டு போகவும் மனமில்லை
இப்ப போய்...அப்புரமா வரேன்.. சரியா?
போதும் நிறுத்து...ரொம்ப குறும்பு - உனக்கு…
இரு...இரு...குழாயை அடைத்து விட்டால்
என்ன செய்ய முடியும்?! - உன்னால்
செல்லமே, உன்னில் நனைய;
உன்னை இரசிக்க எனக்கும் ஆசைதான்..
தயாராய் இரு...அப்புரமாய் வரேன்..
கொஞ்சம் காத்திரு என் குளியலரை நீரே!!!

Wednesday, July 15

தமிழ் குழந்தை...ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு பல நிறைந்தவை. 
பருவகால மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். 
பன்னிரெண்டு மாதமும் அழகானவை. 
அதிலும் அழகு அவற்றை நம் முன்னோர்கள் அற்புத சொற்றொடர்களில் விளக்கிய விதம். 
தமிழ் குழந்தை இயற்கை அன்னையிடத்தே தவழ்கிறது....சித்திரையில் சோலை தழைக்கும்.

வைகாசியில் காற்று வாய் திறக்கும்.

ஆனிக்காற்று அலறி வீசும்.

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்.

ஆவணியில் மேகம் தாவணி போடும்.

புரட்டாசி வெயில் பொன்னுருகச் காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்.

கார்த்திகையில் கன மழை பொழியும்.

மார்கழி பனி ஊசியாய் துளைக்கும்.
தைப் பனி தரையே நடுங்கும்.

மாசியில் மாம்பூ பூக்கும்.

பங்குனி வெயில் படையைக் கலக்கும்.

Monday, July 6

என்ன இது...

மிக உன்னதமான, மகத்தானது தான்

உயிர் தரும் கடமையாயிற்றே….

மண்ணில் ஒரு விதை முளையெடுக்க

எத்தனை எத்தனை காவல்கள்

இது உள்ளுக்குள் விதைந்து வளரும் புது ஜீவன்

உணர்ச்சி பல யூகிக்கும் பிண்டம்…

தந்தை உயிர் தர, தாய் தன்னில் மீதியைத் தந்தாள்…

தேகம் ஒன்றில்… ஜீவன் ரெண்டு… மூச்சு ஒன்று…

 

பிரபஞ்சத்தை கிழித்தெரிக்கும் 

கட்டுக்கடங்கா உணர்ச்சிகளின் இணைப்பு,

பாரில் விழித்தெழும் புது இணைப்பு,

இறைவன் பெண்மைக்கு மட்டுமே

அளித்த தித்திக்கும் பிரசாதம்…

தாய்மை சுகமான சுமை

தாய்மனதை அந்த பிஞ்சும் உணர்கிறது…

செல்வம் கோடி சேர்த்திருப்பினும்

இந்த பந்தத்திற்கு – தாய்மைக்கு – ஈடேது?!

 

பத்து திங்களும் புத்தம் புது ஜென்மம்

புது பிறவி எடுக்கிறாள்…

மசக்கையுற்ற மேனிதனை

காத்து சேவகம் செய்து

பட்டும் படாமல் உண்டுறங்கி

கால்களின் விரல்களைக் கூட மறக்கிறாள்

தாய்மை திரையிட்டு இருப்பதால்…

சின்ன சின்னதாய்

உயிர் கசியும் வலிகள்

நொடிக்கொரு முறை

செல்ல உதைகள்

ஒரு சுவாசம் போதாமல்

நொடிக்கு இரண்டானது

விரல்களின் செல்ல வருடலில்

சின்னவனின் குட்டி உறக்கம்…

இவள் இதய வானில் நொடிப்பொழுதில்

கோடி வர்ணங்களில் அழகிய ஜாலங்கள்!

விழி நுனியிலும் நெஞ்சுக்கூண்டிலும்

இன்னும் ஈரமாயிருக்கும் மோகன தருணங்கள்!

சிங்கார கண்ணனவன் சீதனமாய் தந்த

அன்பு மிளிரும் உறவிது,

தாய்மையின் மேன்மைதனை

மின்னச் செய்யும் ஆழமான உணர்விது!

 

பாவையவள் மென்மையானவள்,

பூப்பெய்யும் போது

பெண்மையின் இரகசியத்தை அறிகிறாள்!

ஆண்மை ஆட்கொள்ளும் போது

பெண்மையின் குணங்களை உணர்கிறாள்!

தாய்மையைச் சுவாசிக்கும் போது

மங்கையர் பிறப்பின் மகத்துவத்தையும்

வாழ்வின் முழு அர்த்தத்தையும் நுகர்கிறாள்!

 

தாய்மை,

பலருக்கு வாய்ப்பதில்லை,

சிலருக்கு நிலைப்பதில்லை,

பெற்றவர்கள் பாக்கியவதிகள்,

உணர்கின்றவர்கள் உன்னதமானவர்கள்,

பெற்றுணர்ந்து மெய் சிலிர்க்க காத்திருப்போர்

தாய்மையின் சின்னங்கள்!

 

ஆண்களே,

உங்களிடத்திலும் தாய்மையுண்டு,

பெண்ணை நேசித்து மனதில் சுமக்கிறீர்,

காதலை சுவாசிக்கிறீர்,

திருமணம் உங்களுக்குப் பிரசவம் தினம்!

காதல் குழந்தையுடன் இனிதே வாழுங்கள்__ மலர்விழி Jஎனை யாசிப்பவன்...சோர்ந்த போது தலை சாய்க்க

ஒரு தோள்,


துயரத்தைத் தூரவிட்டு விழி நீர்

துடைக்கும் விரல்கள்,


வெற்றியின் போது கட்டியணைக்கும்

அன்பு கரங்கள்.அன்னையாக, தந்தையாக, அண்ணனாக, தோழனாக, குருவாக

என் குழந்தையாக - என்றும் என்னவன்,

என்னை நொடிக்கொரு முறை ஏங்க வைப்பவன்

என்னருகே இனியவன் - என் பிரியமானவன்,

நால்வகை குணங்களை ஒருங்கே அரங்கேற்றி

உடல், பொருள், ஆவியை உறைவித்தவன் – என் வித்தகன்,

பெண்மையின் நாணங்களைத் தொலைத்து

அவனிடத்தில் தாய்மையை உணர செய்தவன் – என் கலைதேவன்,

என் நிழலையும் தொடரும் நிஜமானவன்

ஏழேழு பிறவியும் என் துணையானவன் - எனக்கே எனக்கென்று ஒருவன்!!!

 

மங்கையின் மலர்மனம் மன்னவனிடத்தே மயங்கிக்கிடக்கும்,

பாவையிவள் பார்வை பாதச்சுவடினைப் பார்த்திருக்கும்,

காத்திருப்பேன் காலடிச்சேரும் காலத்தினைக் கண்ணிமைக்குள் கணக்கிட்டு!!!


Friday, July 3

புது உறவு...

தள்ளாடி தத்தி நடக்கும் போது

உனை நான் கரங்களால் தாங்க,

எனை மெருதுவாய் மெல்ல

சுமந்தவரடா உன் தந்தை,

ஆணா பெண்ணா என்ற வினாக்களுகிடையே

எங்களின் ஊடல் உனை வருத்துமென்று

அமைதி காத்து, விழிகளின் வில் சண்டை செய்தோம்...

எனக்குள் நீ நடத்தும் அதிரடி யுத்தங்கள்

என் செல்களில் இனம் புரியா தாக்குதல்கள்

நீ எனக்களித்த இன்ப வலிகளவை!

 

என் உயிருக்குள் ஓருயிர்,

உன் அப்பாவைத் தவிர்த்து

நான் சுமக்கும் மற்றொரு ஜீவன்

என்னில் ஒரு பாதி – நீ,

இருவராக மட்டுமே வாழ்ந்த எங்களுக்கு

புதிய வாழ்வைக் காட்ட வந்த தேன் சிட்டு

இறைவன் எங்களுக்களித்த உயிருள்ள சீதனம்

புன்னகைக்கும் விண்மீன் – நீ,

எங்கள் வாழ்வின் முழுமை - உன் வருகை!