Thursday, April 8

என் சின்னஞ்சிறு கண்மணிக்கு

பல பெண்களின் கனவு - தாய்மை...
படித்ததில் எனக்கு பிடித்தது... - இது
அற்புதமான உணர்வை என்னுள் கலந்தளித்தது...
படித்துத்தான் பாருங்கள்....என் சின்னஞ்சிறு கண்மணிக்கு


என் சின்னஞ்சிறு
கண்மணிக்கு
அம்மா எழுதுவது ..
இன்றோடு நீ உதித்து
பதினோரு வாரம்..
என் வயிற்றில் நீ
இனியதொரு பாரம் ..!

தாயும் பிள்ளையும்
என்றாலும்
வாயும் வயிறும்
வேறாம்..!
சொல்பவர்கள்
சொல்லட்டும்
அவர்களுக் கென்ன
தெரியும் ..

உன் பசிக்கு
என்றே உண்டு
உன் உறக்கம்
மட்டும் உறங்கி
உனக்காகவே வாழும்
நம் ஓருடல் ஈருயிர் வாழ்வு ..!


முதன் முதலில்
உன்னை
மின் ஓவியமாய்
பார்த்தேன் நேற்று ..
பார்த்ததும் நெஞ்சுக்குள்
ஆசையின் ஊற்று ..
என் வயிற்றுக்
கத கதப்பில்
கருவறைக்குள்
சுகமாக நீந்திக்
கொண்டிருந்தாய் நீ ..
வார்த்தைகள் அற்ற
பரவசத்தினில் நான்..!


இரண்டே
அங்குலம் தான்
இருப்பாய் என்றார்கள் ..
ஆனால் அதற்குள்ளே
எத்தனை ஆக்ரமிப்பு
எனக்குள்ளே நீ..!!

கனவுகளில் கண்ட
உன் முகத்தை
கணிப்பொறி காட்டிய
கணம் அழியாத
புகை படமாய்
கைகளில் ஒன்றாக ..
என் நினைவுகளில்
ஆயிரங்களாக ..!

அவ்வப் பொழுது
தலை சுற்றல் ..
எப்பொழுதும் வருவது
வாந்தி மயக்கம் ..
உடல் களைத்திட்டாலும்
உள்ளம் மகிழ்கிறதே..
என்னில் நீ
இருக்கிறாயோ
அல்லது உன்னில்
நானிருக்கிறேனோ
என்று என்னை நான்
கேட்கின்றபோது

நம்மில் நாமிருக்கிறோம்
என்று செல்லமாய்
கூறி வயிற்றுக்குள்
எட்டி உதைக்கிறாய் நீ..
உன்னிடம்
உதை படுவதும்
சுகமாய் தான்
இருக்கிறது எனக்கு..!


நூலகம் நுழைந்து நான்
தேடுவதெல்லாம் ,
காட்டுக்குள்ளே திருவிழா
வன தேவதையும்..
விறகு வெட்டியும் ” .. தான்
பாட்டி வடை சுட்ட
படக் கதை”- யும்
தவறுவதில்லை..
கூடவே பிடிபடாத
கணக்குப் பாடத்தை
சிரத்தையுடன்
செய்கின்றேன்..
அம்மாவின் ஐக்யூ தான்
குட்டி பாப்பாவிற்கும்
வந்து விடுமென்று
சொன்னதினால்
வந்த பயம்..!!

காத்திருப்பு
என்றுமே சுகமாய்
இருந்ததில்லை ..
ஆனால் இப்பொழுது
இருக்கிறதே
வெகு பரவசமாய்..
இன்னமும் ஏழு
மாதங்கள்
இருக்கிறதாம்..
முழு நிலவாய்
உன்னை மண்ணில்
நான் காண்பதற்கு ..!
என் கருவறையின்
கத கதப்பில்
இதயத்தின்
தாலாட்டில்
சுகமாகத் திரியும்
உன்னை நிரந்தரமாய்
சிறையில் தள்ள
காத்திருகின்றேன் நான் ..!

பயந்து விடாதே ..
இது அன்பெனும்
கம்பிகள் கொண்ட
நம் குடும்பமெனும்
பாச()றை ..!

இதற்குள் என்றைக்கும்
பிணைக் கைதிகளாய்
நானும் உன் அப்பாவும் ..
விரைவில் நீயும் …!
இருப்பாய் தானே..?
நீ இருப்பாய்
என்கின்ற
நம்பிக்கை தான்
எங்கள் வாழ்வாதாரம்..!!


நீ பெண்ணாக
இருப்பாய் என்று
உன் அப்பாசகி
என்று பெயரிட்டார்..
ஒவ்வொரு நாளும்
நீ அழகாய் வளர்ந்திட
என்னுடன்
இணைபிரியாத ஓர்
ஒப்பந்தம் இட்டார்..
ஆனால் நீயோ
ஆண் குழந்தையாம்..
மருத்துவர்
சொல்லிவிட்டார்..

இப்பொழுது
பிரணவ் என்று
மாற்றி உன்னை
அழைக்கிறோம் ..
உயிரில் இருந்து
உயிராக வந்தவன்
என்பதால்
மட்டும் இல்லை..
பெண்மையை
உயிராய் மதிப்பாய்
என்பதனாலும் தான்..


உன்னை பெண்ணாக
பாவித்து சில நாட்கள்
வாழ்ந்ததினால்
பெண்ணின் உணர்வுகளும்
உனக்கு புரிந்திடவே
செய்யும் என்று நம்புகிறேன் ..
அன்னையின் கருவுக்குள்ளே
வேதங்களே கற்றிடுமாம்
சிறு குழந்தை ..
நீ பெண்ணியலா
கல்லாமல் இருந்திடுவாய்..

என் விருப்பு நான் மறந்து
உன் வளர்வில்
மனம் நிறைகின்றேன்..
எனக்கென்ற கனவுகள்
இருந்தது ஒரு காலம்..
நிஜமென நீ இருக்கையில்
கனவுகளும் நீயாய் போனாய் ..!

ஒவ்வொரு மாதமும்
வளர்வது
நீ மட்டுமல்ல ..
உன்னுடன் நானும் ..
உன் அப்பாவும் தான்..!
கூடவே சில சிரமங்களும்..
நிஜங்களையும்
நீ அறிந்திடவே
நான் இதனை கூறுகின்றேன்..

உன் வாழ்க்கை
தேன் கிண்ணமாய்
தித்திப்புடன் மட்டுமே
என்றென்றும் இருக்கும்
ஓயாமல் உழைக்கும்
தேனீக்களாய் நானும்
அப்பாவும் இருக்கும்வரை..!


பிரதி பலனாய்
நான் கொஞ்சம்
எதிர் பார்க்கவும்
செய்கிறேன் கண்ணா ..
நீ ஆண் என்று
அறிந்ததில் இருந்து ..!
முட் கிரீடத்தை
சூட்டி விடுவேன்
என்று நினைக்காதே..
ஒவ்வொரு
பெற்றோருக்கும்
ஒரு சில கனவுகள்
இருந்தே தீரும்..
சிலர் சொல்கிறோம்..
சிலர் மறைக்கிறோம்..

தலைப் பிரசவம்..
பிழைத்தால்
எனக்கிது மறு ஜன்மம்..
இல்லாவிடின் மறு ஜனனம் ..
என் உயிர் ஊட்டி
உன் உடல் வளர்க்கிறேன் ..
என் பிரதி பலிப்பாய்
இருந்திடுவாய்
என்பதால் அல்ல..
உனக்கொரு முகவரியுடன்
தனித்துவமாய் இருப்பாய் என்று !

எப்போதும் நினைவுகொள் ..
ஆணிற்குப் பெண்
என்றைக்கும் சமமில்லை..
தாயாகும் பெண்ணிற்கு
வேறொன்றும் ஈடில்லை ..
உடன்படு..அதனால் கடன்படு ..
உயிர்பட்ட கடனை
எல்லா உயிர்களிடத்தில்
சமத்துவ அன்பு காட்டி
வட்டியுடன் தீர்…!


நியூட்டன் , எடிசன்
ஐன்ஸ்டீன் அறிவுடன்
இருந்திடாமல் போனாலும்
புத்தர், காந்தி
தெரசா பணிவுடன்
என்றென்றும் வாழ்ந்திடு ..
போலித் தனம் தவிர்
மொழி வெறி, இன வெறி
நிற வெறி , மத வெறி
ஏதும் இல்லாத புதியதொரு
உலகம் சமைத்திடு ..
அதில் சமாதானப்
பூக்களை
நாளும் வளர்த்திடு
பின்பு எனக்கு கொள்ளியிடு…..!


இப்படிக்கு
உன்னிடம் இருந்து
நிறைய எதிர்பார்க்கும்
உன் சுயநலக்கார அம்மா