Tuesday, August 11

காத்திருப்பேன்...சத்தமின்றி மெல்ல மிருதுவாய்

என் வாழ்வில் நுழைந்தாய்

எப்படி பறிகொடுத்தேன் என்னை? – உன்னை

துளி கூட அறியாது!

மன தவிப்பு தாளாமல் உன் வசம் ஆனேனா?

அல்ல ஆழமாய் உன் மேது ஓர் ஈர்ப்பு கொண்டேனா?

என் கனவின் நீ நுழைவாய் என்று அறியாது

உறக்கத்தில் மென்மையாய் மிதந்தேன்

பல காலம் காத்திருந்தேன்

உன் போன்ற ஒருவனை சந்திக்க

இப்போது நீ என்னோடு; என் அருகில்

இனிமையாய் தான் இருக்கும் இவை நினைவானால்…


இப்போது உன் முன் நிற்கிறேன்

திறந்த மனதோடு, உன்னை மட்டும் சுமந்து - நீயும்

உன் மனக்கதவை திறந்துவிடுவாய்

என்னோடு வாழ்வை பகிர்வாய் என்று

உன்னோடு நான் நெருங்க

உன் அணைப்பில் நான் கரைந்து

உன்னோடு கலந்துவிட வேண்டும்!

உன் குறும்பு பார்வையால் நான்

கூனி குறுகி புன்னகைக்க வேண்டும்!

உன்னில் உறைந்து என் உயிர் சிரிக்க வேண்டும்!

உன் மார்பில் முகம் புதைத்து நான் வாழ வேண்டும்!

மரணத்தைக்கூட நான் உன் மடியில் தழுவ வேண்டும்!

யாரடா நீ? புதுமையாய் ஏதோவொன்று உள்ளே நிகழ்கிறது!?

என்ன இது??? எப்படி என்னுள்???


உன்னால் முடிந்தால்

என் மனதை ஆழமாய் உற்று பார்

உன் மனதை என்னிடம் கொடு

சத்தியமாய் துன்புறுத்தவோ

வதைக்கவோ, சிதைக்கவோ மாட்டேன்…

அத்துணை கொடியவளல்ல… உன்னை

மனதில் சுமக்கும் உன் இரண்டாம் தாயடா நான்!


என் தவிப்புகளைப் புரிந்துக் கொள்ள

கஷ்டமாய், ஏளனமாய், புதிராய், கேளியாய் இருப்பினும்…

என் காதல் முழுமையையும்

தந்துவிட்டேன் – உன்னிடம்…..

சீக்கிரம் வந்து என் கைகளைப் பற்றிக்கொள்…

என் காதல் உன்னையும் உறைய வைக்கும்…

அந்த திருநாள் தூரமில்லை – என் உண்மை

காதல் என் பக்கமிருப்பதால்!

காலமெல்லாம் உனக்காகவே காத்திருப்பேன்...


என்றென்றும் மனதார உன்னோடு வாழும்,

உன்னவள் :)

Tuesday, August 4

உண்மை அன்பு எங்கே...

ஞானி ஒருவர் கூறுகிறார், “வானத்தைப் பிழிந்து மழையாக்குவதும், மழையை வானமாக்குவதும் எனக்குச் சுலபம். ஆனால், என் சக்தியை நிரூபிக்க அது மட்டும் போதாது…உண்மையான, மகத்தான சக்தி ஒன்று உள்ளது...அது அன்பு”.

அன்பினால் மட்டுமே ஒருவர் மனதைத் தொடவும் மனதின் தன்மையை மாற்றவும் முடியும்! “அன்பே சிவம்”, “சிவமே அன்பு” கடவுளை நம்புகின்றவருக்குக் கடவுளே அன்பு. நாத்திகருக்கு அன்பே கடவுள். இதிலிருந்து மீள்பவர் எவருமிலர். திருமந்திரத்தில் திருமூலர் இதையே அழகாய் பாடியும் உள்ளார்,

“ அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”

இறைவனது தோற்றம் மங்களகரமானது. இருப்பிடமும் மங்களகரம்.அன்பை நுகருபவர் இறைவனையடையும் வழியை எளிதில் பெறுவர்.

கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு; பெறுவதும் மறப்பதும் வாழ்க்கை.

Love lives by giving and forgiving; self lives by getting and forgetting.

நல்லவராய் இருப்போம்; நல்லதே செய்வோம் (be good, do good)
நமக்கும் நல்லதே நடக்கும்!

உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம் முதலில் உள்ளூர உணர வேண்டும். இறைவனை தேடி அலையாதீர். அவன் உங்களிடமுள்ள அன்பில் ஜோதியாய் இருக்கிறான். அன்பை அனைவரிடத்திலும் செலுத்துங்கள், இறைவன் உங்களை அவன் அருளால் அணைப்பான், அரவணைப்பான்.

உங்களை வெறுப்பவர்களை நீங்கள் விரும்புங்கள், உங்களை விரும்புகிறவர்களை ஒரு போதும் வெறுக்காதீர்! இப்பக்குவமானது ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுமேயானால் நாம் இறைவனை நெருங்கும் தருணம் மிக நீளமில்லை. அனைவரின் பெயரிலும் உருவத்திலும் இறையைக் காண்போம்!

இதோ பாருங்கள்...கள்ளங்கபடமற்ற அன்பைப் பொழியும் இந்த மழலைகளிடத்திலும் அவன் இருக்கிறான்…

அவன் அன்பின்றி இவ்வுலகமில்லை,
அவனின்றி நாமுமில்லை,
அவனின்றி எதுவுமில்லை...நமக்கு எதுவுமில்லை...

நம்முள் வாழும் அவனை அறிவோம்...
ஜோதியை உணர்வோம்...
மெய்பொருளே உமக்கு என்றென்றும் சரணம்...

Monday, August 3

காதலே...காதலே...

ஷாஜஹான் தனது காதல் மனைவிக்கு அன்பின் அடையாளமாக தாஜ்மஹால் எழுப்பியது மாதிரி பெண்களில் கணவனுக்காக பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு.....


பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியான காரியா எனும் நாட்டை, முன்பு (கி.பி 377) ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான்.
அவன் பெயர் மாசோலஸ் (அவர்கள் மொழியில் ஆணழகன்).
அவனை ஆர்ட்டிமிர்ஸியா என்ற பெண் காதலித்தாள்.
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தார்கள்.திருமணம் செய்துகொண்டு அன்பைப் பொழிந்து வாழ்ந்து வந்தனர்... துரதிர்ஷ்டவசமாய் மாஸோலஸ் நோய்வாப்பட்டு,
இளம் வயதிலேயே இறந்து போனான்.
ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு...
ஆனால் அவனது நினைவு அவளை மிகவும் வாட்டியது, வருத்தியது…
மனதிற்குள் அழுதாள், புலம்பினாள், பித்தானாள்...
அந்த நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்.

உலகத்தின் புகழ்ப் பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள்..
36 தூண்கள் அமைக்கப்பட்டன..
விண்முட்டும் அளவில் 24 அடுக்குகள் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது.. நடுவில் கல்லறை..
அதற்குமேல் மாசோலஸ் மன்னருடைய பிரமாண்ட சிலை..
கல்லறைக்குச் செல்ல 200 படிகள்..
கண்ணைக் கவரும் ஓவியங்கள்..
இப்படி எல்லாரையும் கவரும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்து
அதற்கு மாசோலியம் என்று பெயரிட்டாள்.இது உலகின் பழம்பெறும் கலை அதிசயமாக போற்றப்பட்டு வருகிறது.
மேலும் இம்மன்னரின் பெயர் இது போன்ற கட்டிட கலை மற்றும் அமைப்பு கொண்ட அனைத்து கட்டிடங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால்,
மாசோலஸிற்கு காதல் மனைவி கட்டிய உன்னத மாசோலியம்!

உணர்ந்தால்…காதல் உயிரானது!
என்றும் உயர்வானது!
அது யாரையும் விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை...
உலகில் முதலில் தோன்றியது காற்று,
அதில் இதமாய் கலந்து அனைவரையும் ஈர்த்துக்கொண்டு கம்பீரமாய் வலம் வருவது காதல்...

காதலே...காதலே...உனை நுகர்கிறேன், உன்னால் வாழ்கிறேன்!