Tuesday, August 4

உண்மை அன்பு எங்கே...

ஞானி ஒருவர் கூறுகிறார், “வானத்தைப் பிழிந்து மழையாக்குவதும், மழையை வானமாக்குவதும் எனக்குச் சுலபம். ஆனால், என் சக்தியை நிரூபிக்க அது மட்டும் போதாது…உண்மையான, மகத்தான சக்தி ஒன்று உள்ளது...அது அன்பு”.

அன்பினால் மட்டுமே ஒருவர் மனதைத் தொடவும் மனதின் தன்மையை மாற்றவும் முடியும்! “அன்பே சிவம்”, “சிவமே அன்பு” கடவுளை நம்புகின்றவருக்குக் கடவுளே அன்பு. நாத்திகருக்கு அன்பே கடவுள். இதிலிருந்து மீள்பவர் எவருமிலர். திருமந்திரத்தில் திருமூலர் இதையே அழகாய் பாடியும் உள்ளார்,

“ அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”

இறைவனது தோற்றம் மங்களகரமானது. இருப்பிடமும் மங்களகரம்.அன்பை நுகருபவர் இறைவனையடையும் வழியை எளிதில் பெறுவர்.

கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு; பெறுவதும் மறப்பதும் வாழ்க்கை.

Love lives by giving and forgiving; self lives by getting and forgetting.

நல்லவராய் இருப்போம்; நல்லதே செய்வோம் (be good, do good)
நமக்கும் நல்லதே நடக்கும்!

உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம் முதலில் உள்ளூர உணர வேண்டும். இறைவனை தேடி அலையாதீர். அவன் உங்களிடமுள்ள அன்பில் ஜோதியாய் இருக்கிறான். அன்பை அனைவரிடத்திலும் செலுத்துங்கள், இறைவன் உங்களை அவன் அருளால் அணைப்பான், அரவணைப்பான்.

உங்களை வெறுப்பவர்களை நீங்கள் விரும்புங்கள், உங்களை விரும்புகிறவர்களை ஒரு போதும் வெறுக்காதீர்! இப்பக்குவமானது ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுமேயானால் நாம் இறைவனை நெருங்கும் தருணம் மிக நீளமில்லை. அனைவரின் பெயரிலும் உருவத்திலும் இறையைக் காண்போம்!

இதோ பாருங்கள்...கள்ளங்கபடமற்ற அன்பைப் பொழியும் இந்த மழலைகளிடத்திலும் அவன் இருக்கிறான்…

அவன் அன்பின்றி இவ்வுலகமில்லை,
அவனின்றி நாமுமில்லை,
அவனின்றி எதுவுமில்லை...நமக்கு எதுவுமில்லை...

நம்முள் வாழும் அவனை அறிவோம்...
ஜோதியை உணர்வோம்...
மெய்பொருளே உமக்கு என்றென்றும் சரணம்...

4 comments:

  1. //உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம் முதலில் உள்ளூர உணர வேண்டும். //
    அன்பில் எது உண்மை எது போலி என்று அறிவதில் அல்லது உள்ளூர உணர்வதில்தான் சிரமமாய் உள்ளது.

    ReplyDelete
  2. @ tamilvanan
    உண்மை அன்பு மலர்ந்த இதயத்தில் போலிதனம் என்றும் இருக்காதுங்க...இருந்தாலும் அந்த உறவு ஒருபோதும் நிலைக்காது...அந்த மெய் அன்பை பெற்று உணர சிரமம் இருக்காது, இருக்கவும் கூடாது...

    பொம்மையுடன் விளையாடும் ஒரு குழந்தையை பாருங்க. கண்ணில் ஓர் ஒளி, மகிழ்ச்சி, இதழில் புன்னகை நர்த்தனமாடும். கள்ளகபடம் இருக்காது. பொம்மையை மெல்ல தொட்டு எடுத்து பாருங்க, அழுது ஊரையே கூட்டும். அந்த மழலையிடத்தே உண்மை அன்பு இருக்கு, பொம்மையிடத்தே...

    இன்றைய அவசர உலகில் இயந்திரயாய் இருக்கும் பலர் உண்மை அன்பை மதிப்பதில்லை...இருப்பினும் அதை வாழ வைக்கவும் சிலர் இருக்கின்றனர்...

    உண்மை அன்பை இனிதாய் முழுதாய் அனைவரிடத்திலும் செலுத்தி அதனை பெற்று வாழ்வில் இன்புறுங்கள், வாழ்த்துகள்:)

    -வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க-

    ReplyDelete
  3. நல்ல பதிவு


    அன்பே சிவம்

    ReplyDelete
  4. நன்றி அண்ணா :)
    மீண்டும் வருக_

    ReplyDelete